

தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால்விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அரசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
தமிழகத்தில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளன.
இதனால் பால் விலையை அந்த நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ந் தேதி பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும் தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தியது.
இந்த நிலையில் மற்ற தனியார் பால் நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் பால்விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா உள்ளிட்ட பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.4 ரூபாய் வரையில் உயர்த்துகின்றன. அதன்படி சமன்படுத்தப்பட்ட 500 மில்லி பால் 31 ரூபாயில் இருந்து 32 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 35 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 40 ரூபாயில் இருந்து 42 ரூபாய் ஆகவும் உயருகின்றன.
ஒரு லிட்டர் பாக்கெட் சமன்படுத்தப்பட்ட பால் 59 ரூபாயில் இருந்து 61 ரூபாயாகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் 68 ரூபாயில் இருந்து 70 ரூபாய் ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 78 ரூபாயிலிருந்து 81 ஆகவும் உயர்த்தப்படுகிறது. 500 கிராம் தயிர் ஒரு ரூபாய் கூடியுள்ளது.
இதன்மூலம் தனியார் பால் விலைக்கும் ஆவின் பால் விலைக்கும் வேறுபாடு மேலும் அதிகரித்துள்ளது.
குறைந்தபட்சம் 14 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ரூபாய் வரை ஒரு லிட்டருக்கு விலை வித்தியாசம் ஏற்படுகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் ஆவின் பால் மீது திரும்ப கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.