சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி

முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.
kanimozhi
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் பங்கேற்றார்.

கூட்டத்தில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும்போது முதலமைச்சர் விஜய்யை கடுமையான வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

3 பிரிவுகளில் வழக்கு

மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார்.

அதில், முதலமைச்சர் பற்றி அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 351(3)-கொலை மிரட்டல் விடுத்தல், 352- அவதூறாக பேசுதல், 353(2)- மக்களிடையே பகை வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மார்க்கண்டேயன் கைது

இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு டி.எஸ்.பி.க்கள் கண்ணன், சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜானி தலைமையிலான போலீசார் சென்றனர். அதன்பின், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக திமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.விற்கு சிறைச்சாலை புதிது கிடையாது. வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது.

திமுகவினர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவதைப் பெருமையாகக் கருதுவர்.

புகார் குறித்து விசாரிக்க கூட அரசு தயாராக இல்லை.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனையும் சிறையில் அடைக்க முயற்சித்தனர்.

ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது தவெக அரசு.

எதிர்க்கட்சிகளை அடக்கவே காவல்துறை முயற்சிக்கிறது.

திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கை இல்லை.

பாஜக பெயரை சொல்ல தயக்கம் காட்டுகிறது.

கொள்கையை ஒருபோதும் திமுக விட்டுக் கொடுக்காது.

அதிமுக, திமுக ஒருபோதும் நெருங்கி வந்தது கிடையாது.

தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com