

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். சூறாவளி காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.