

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் துணை ஜனாபதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, இளநிலை பொறியாளரை சஸ்பெண்ட் செய்து மின்சாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, கடந்த வெள்ளிக்கிழமை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு வருகை தந்தார்.
இதையடுத்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் அர்லேகர் மற்றும் பாஜகவை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு செய்தார்.
இதற்கிடையில் மீனாட்சியம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது, மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்வத்திற்கு கண்டனங்கள் எழுந்தன.
இந்த சம்பவம் குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி வருகையை ஒட்டி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும், இதன் காரணமாக கோவில் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
துணை ஜனாதிபதி கோவிலில் இருந்தபோது, அவர் புறப்பட்டு சென்றுவிட்டதாக தவறுதலாக நினைத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
இந்த நிலையில் தற்போது இளநிலை பொறியாளர் ஜானகிராமன் என்பவரை சஸ்பெண்ட் செய்து மின்சாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.