

வீடு புகுந்து மகள் கண் முன்னே தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 60). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 பேருக்கு திருமணமாகி உள்ளது. ஒரு மகள் வெளியூரில் வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியில் கணவர் பிரபாகரனுடன் மூத்தமகள் மகாலட்சுமி (33) வசித்து வருகிறார். பிரபாகரன் கொடுமைப்படுத்தியதாக கடந்த மாதம் மகாலட்சுமி பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து பிரபாகரன் தலைமறைவானார். இதையடுத்து மகாலட்சுமி தனது தந்தை மகேந்திரன் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். தலைமறைவான பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மகேந்திரன் மகளுடன் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அவர்கள் வீடு புகுந்து மகாலட்சுமியை வெளியே தள்ளிவிட்டு மகேந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். தன் கண் முன்னாலேயே தந்தை கொலை செய்யப்பட்டதை கண்டு மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் அறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா ப்ரியா விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பொறையாறு போலீசார் மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகேந்திரன் கொலை செய்யப்பட்டதற்கு காரணம், குடும்ப பிரச்சினையா? முன் விரோதமா என்ற கோணத்தில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து மகள் கண் முன்னே தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.