

பொன்னேரி- மீஞ்சூர் சாலை, பொன்னேரி- தச்சூர் சாலை, பொன்னேரி-பழவேற்காடு சாலை மிகவும் குண்டு குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பொன்னேரியை சேர்ந்தவர் நடராஜன் (வயது75). இவர் அருட்பிரகாச வள்ளலார் திருச்சபையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். நேற்று வள்ளலார் திருச்சபையில் பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
பொன்னேரி அண்ணாசிலை அருகே சாலையோரம் நடந்து சென்றபோது செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த மாநகர பஸ் திடீரென நடராஜன் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய நடராஜனை சில மீட்டர் தூரம் பஸ் இழுத்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
உயிருக்கு போராடிய நடராஜனை மீட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது, பொன்னேரி- மீஞ்சூர் சாலை, பொன்னேரி- தச்சூர் சாலை, பொன்னேரி-பழவேற்காடு சாலை மிகவும் குண்டு குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. புதிய பஸ்நிலையம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கட்டி முடிக்கப்படாததால் சாலையின் ஓரத்தில் பஸ்சுக்காக பயணிகள் கூட்டமாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது என்றனர்.