பொன்னேரி ஜெயிலில் ஆய்வு- திருக்குறள் புத்தகம் வாசித்த கைதியை பாராட்டிய நீதிபதி

ஜெயிலில் அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும், கைதிகள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
Chief District Judge Juliet Pushpa
Published on
Summary

பொன்னேரி கிளை சிறையில் திருக்குறள் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கைதியை பார்த்து மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து பாராட்டினார்.

பொன்னேரி கிளை சிறையில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமையில் முதன்மை சார்பு நீதிபதி மகேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதிபதி தீன தயாளன் (பொறுப்பு) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நளினி தேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது கிளைச் சிறையில் கைதிகளுக்கு முறையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? எனவும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

கிளைச் சிறைக்குள் கைதிகள் அடைக்கப்படும் அறைகளையும், கைதிகள் நேர்காணல் அறையையும் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து சிறைச்சாலையில் பராமரிக்கப்படும் கைதிகள் ஒப்படைப்பு பதிவேடு, பாரா பதிவேடு, சிறை பதிவேடு, ஆயுத அறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

சிறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் எடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கைதிகளுக்கு தேவையான சட்ட உதவிகள், கல்வி மருத்துவம் குறித்தும் கேட்டிருந்தனர்.

அப்போது திருக்குறள் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கைதியை பார்த்து மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து பாராட்டினார்.

ஜெயிலில் அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும், கைதிகள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இனி சிறைக்குள் வரக்கூடாது நல்ல மனிதனாக சமுதாயத்தில் வாழ வேண்டும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், சட்ட உதவிகள் தேவைப்பட்டால் குழு வினரிடம் தெரிவிக்கவும் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார்.

மேலும் அனைத்து கைதிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கிளை சிறை கண் காணிப்பாளர் சசிகுமார் (பொறுப்பு) மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com