கோவை செல்வபுரத்தில் குளம் நிரம்பி வெள்ளப்பெருக்கு- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
கோவை செல்வபுரத்தில் குளம் நிரம்பி வெள்ளப்பெருக்கு- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
Published on: 
Summary

வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்ததால் வீடுகளில் தங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இரவு விடிய, விடிய தூங்காமல் அந்த பகுதி மக்கள் தவித்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கனமழை

நேற்று உக்கடம், காந்திபுரம், ராமநாதபுரம், குனியமுத்தூர், கவுண்டம்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, சிங்காநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

செல்வசிந்தாமணி குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறிய காட்சி.
செல்வசிந்தாமணி குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறிய காட்சி.

ஊருக்குள் வெள்ளம்

தொடர் மழையால் கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. கோவை செல்வபுரத்தில் செல்வ சிந்தாமணி குளம் உள்ளது. நொய்யல் ஆற்று வெள்ளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை வெள்ளம் இந்த குளத்துக்கு வந்து கொண்டே இருந்தது. இதனால் குளத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இரவில் குளம் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் குளத்தில் இருந்து பெருக்கெடுத்து வெளியேறியது.

மழை வெள்ளம்

மழை வெள்ளம் ரோட்டை கடந்து எதிர் திசையில் உள்ள அசோக் நகர், பிரபு நகர், சாவித்திரி நகர், செட்டி வீதி, உக்கடம்-செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்தது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்ததால் வீடுகளில் தங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இரவு விடிய, விடிய தூங்காமல் அந்த பகுதி மக்கள் தவித்தனர்.

குடியிருப்புகளில் தேங்கிய நீர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்ட காட்சி

மின் மோட்டார்கள்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து இருந்த தண்ணீரை அதிக சக்தி கொண்ட மின் மோட்டார்கள் மற்றும் லாரிகள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது. மேலும் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் சமையல் செய்ய முடியாமல் தவித்த குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்கள், தேநீர் வழங்கி உதவிகள் வழங்கப்பட்டது.

வீடுகளுக்குள் தண்ணீர்

செல்வபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் பல காணாமல்போனதால் அங்குள்ள தண்ணீர் செல்வபுரம் சிந்தாமணி குளத்திற்கு அதிக அளவில் வந்ததாக கூறப்படுகிறது. வீடுகளை சூழ்ந்த வெள்ளம் அங்குள்ள திருமண மண்டபங்களையும் சூழ்ந்ததால் பொதுமக்களை அங்கு தங்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலைக்குள் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளநீர் வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அந்த நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறிய ரோடுகளில் ஆறாய் ஓடிய காட்சி.
குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறிய ரோடுகளில் ஆறாய் ஓடிய காட்சி.

குற்றச்சாட்டு

சூலூர் கலங்கல் பகுதியிலும் நேற்று பெய்த மழையால் அங்குள்ள குட்டை நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. அண்ணாநகர் பகுதியில் மழை வெள்ளநீர் 100 வீடுகளை சூழ்ந்தது. இதனால் வீடுகளில் மக்கள் வசிக்க முடியாமல் வெளியில் வந்தனர். குளங்கள், குட்டைகளை ஆழமாக தூர்வாராததால் மழை வெள்ளநீர் உடனடியாக ஊருக்குள் புகுந்துவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர். அவர்களுக்கு அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் செய்தனர். இதேபோன்று பல இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com