

தீபாவளி பண்டிகை என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது பட்டாசுகள். குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி தண்ணீர் இன்றி தரையில் நீந்திச் செல்லும் மீன்கள், டிரைவர் இல்லாமலேயே சீறிப்பாயும் பந்தய கார்கள், தீப்பொறிகளை பீய்ச்சியடிக்கும் மற்றும் ஷாம்பெயின் பாட்டில்கள் என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு தீபாவளிக்காகப் பல புதிய மற்றும் கண்கவர் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். வழக்கமான பட்டாசுகளுக்கு மாற்றாக வண்ணம், இயக்கம் மற்றும் ஒலி ஆகியவற்றை இணைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டின் புதிய வகை விசேஷப் பட்டாசுகளில் ‘பங்கி பிஷ்’, ‘ரேஸ் கார்’, ‘பர்பிள் பைரோ’, ‘சீட்டி மார்’, ‘காப்டர்’ மற்றும் ‘புளூமிங் லோட்டஸ்’ போன்றவை முக்கிய இடம் பிடித்துள்ளன. வழக்கமான ஒரு முறை மட்டும் வெடிக்கும் பட்டாசுகளைப் போலன்றி, இவை வண்ணங்களை மாற்றிக்கொண்டே பல்வேறு காட்சிகளை கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகின்றன.
இதில் குறிப்பாக பங்கி பிஷ் பட்டாசு தரையில் நகர்ந்து கொண்டே வாயிலிருந்து வண்ணத் தீப்பொறிகளை உமிழும். ரேஸ் கார் பட்டாசு பற்றவைத்தவுடன் தரையில் அதிவேகமாக முன்னோக்கிப் பாயும். புளூமிங் லோட்டஸ் பட்டாசு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் விரிந்து பூக்கும் நீரூற்று போன்ற காட்சியைத் தரும்.
ஷாம்பெயின் பாட்டில் பட்டாசு நுரைத்து பொங்கி வழியும் குமிழ்கள் போன்ற வண்ணப் பொறிகளை வெளிப்படுத்தும். சீட்டி மார் மற்றும் காப்டர் பட்டாசுகள் வானில் விசில் சத்தத்துடன் வட்டமடித்துப் பறக்கும்.
இவை தவிர பயர் எக், குல்பி ட்ரீம்ஸ், மேஜிக் மணி, பட்டர்பிளை பவுண்டன் மற்றும் மயில் வடிவிலான பட்டாசுகளும் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான தங்க நிற வெளிச்சத்திற்கு மாற்றாக வயலட் நிற பூந்தொட்டிகள் மற்றும் வானில் பல வண் ணங்களை உமிழும் ‘மல்டி-ஷாட்’ வெடிகளும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் தற்போது தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிச் சின்னங்களின் வடிவமைப்பிலும், பெயர்களைச் சூட்டியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு ரகங்கள் அமோகமாக விற்பனையாகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தாமரைச் சின்னத்தின் பெயரிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்ன வடிவிலும், அதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குக்கர் சின்னத்திலும் புதியதாக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளன. தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் வடிவமைப்பில் ஒளிரும் பட்டாசும் அறிமுகப்படுத்தப்பட்டு அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் கட்சி சின்னங்களின் வடிவமைப்பிலும், பெயர்களைத் தாங்கியும் புதிய ரகப்பட்டாசின் வரவினால் பட்டாசுக் கடைகளில் வியாபாரம் மும்முரமாகக் களைகட்டி சூடு பிடித்துள்ளது.
சிவகாசி உற்பத்தியாளர்களின் விலைப்பட்டியலின் படி, பங்கி பிஷ் ஒரு பாக் கெட் சுமார் ரூ.184-க்கும், இரண்டு ரேஸ் கார்கள் கொண்ட பாக்கெட் சுமார் ரூ.590-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மதுரை தமுக்கம் மைதானத்தில் கடை அமைத்துள்ள வியாபாரிகள் தெரிவிக்கையில், “30 முதல் 50 அடி உயரம் வரை சென்று வெடிக்கும் பிரம்மாண்ட வானவேடிக்கை ரகங்களுக்கும், புதிய வயலட் வண்ண பூந்தொட்டிகளுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது” என்று கூறியுள்ளனர்.
மேலும், தனித்தனி பட்டாசுகளாக வாங்குவதைத் தவிர்த்து மத்தாப்பு, புஸ்வாணம், சக்கரம் மற்றும் வானவேடிக்கை வெடிகள் அடங்கிய ‘காம்போ பாக்ஸ்’ ரகங்களை ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையிலான விலைகளில் குடும்பமாக வந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வாங்கிச் செல்கின்றனர். இப்புதுமை ரகங்களுடன் சேர்த்து சுற்றுசூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகளும் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.