

உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி அசுரவேகத்தில் உருவெடுத்து வரும் சூழலில், 'செயற்கை நுண்ணறிவு' (ஏ.ஐ)மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெருநிறுவன ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், வேலைகளை எளிதாக்கவும் ஏ.ஐ. செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பம் தரும் அளப்பரிய நன்மைகளுக்கு இடையே, சரியான விழிப்புணர்வு இல்லாததால் அதில் ஒளிந்துள்ள ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை உணர்ந்த திருப்பூர் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏ.ஐ.-யை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி சிக்கலான தரவுகளை நொடிகளில் பகுப்பாய்வு செய்வது, மொழியாக்கம், புதிய யோசனைகளை உருவாக்குவது, கல்வி கற்றலை எளிதாக்குவது என மனித உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதில் ஏ.ஐ. முன்னணியில் உள்ளது.
இணையத்தில் நாம் பகிரும் தகவல்கள் ஏ.ஐ.-ன் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றன. சைபர் குற்றவாளிகள் இந்தத் விபரங்களை திருடி, 'டீப்பேக்' உருவகப்படுத்துதல், ஆள்மாறாட்டம் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தும் பேராபத்து நிலவுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதன்படி கடவுச்சொல், வங்கிக் கணக்கு எண்கள், ஆதார் மற்றும் பேன் கார்டு போன்ற மிக முக்கியமான தனிப்பட்ட விவரங்களை எக்காரணம் கொண்டும் ஏ.ஐ. தளங்களில் உள்ளீடு செய்யக் கூடாது.
அதேபோல் உடல்நலக் குறைபாடு, மருந்து மாத்திரைகள் மற்றும் மனநலச் சிகிச்சை சார்ந்த சந்தேகங்களுக்கு ஏ.ஐ. வழங்கும் பதில்கள் பொதுவான தகவல்கள் மட்டுமே. தகுதியான மருத்துவ நிபுணரின் நேரடி ஆலோசனைக்கு இது மாற்றாகாது.
மேலும் சட்டத்திற்குப் புறம்பான அல்லது பிறரின் கண்ணியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்ய ஏ.ஐ.-யின் உதவியை நாடக்கூடாது. திருமணம், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் குடும்பப் பிரச்னைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ஏ.ஐ. அளிக்கும் தகவல்களை மட்டுமே நம்பி எடுக்கக்கூடாது. அதை ஒரு துணைத் தகவலாகக் கொண்டு, நம்பகமான நபர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
"ஏ.ஐ. என்பது மனித மூளைக்கு மாற்றல்ல; அது ஒரு வழிகாட்டும் கருவி மட்டுமே. இன்று பல இணைய பயனர்கள் தங்களின் வங்கி ரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை ஏ.ஐ. செயலிகளில் பதிவேற்றம் செய்வதால், அவை தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று நிதியிழப்புக்கும், மன உளைச்சலுக்கும் வழிவகுக்கிறது.மேலும், தவறான நோக்கங்களுக்காகவோ அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், சைபர் குற்றப் பிரிவுச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்நுட்பத்தை நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 'பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம் – பொறுப்புடன் வாழ்வோம்' என்பதை பொதுமக்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்பம் அவசியம் என்றாலும், கவனமும் விழிப்புணர்வுமே நமது டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார்.