ஆபாச SMS விவகாரம்: கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ.வுக்கு சம்மன்- விசாரணைக்கு இன்றே ஆஜராக உத்தரவு

மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் சேகர் ஆகியோருடன் இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்
Published on: 
Summary

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவருக்கு சம்மன் வழங்கி, இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ். இவர், மாவட்ட பெண் கலெக்டருக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது இல்லத்திற்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆபாச குறுஞ்செய்தி

எம்.எல்.ஏ.வின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே பெண் கலெக்டருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க வக்கீல் திரிசூலி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துக்களை கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளில் வழக்கு

அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ், மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்று, மாவட்ட கலெக்டரிடம் இருந்து எழுத்து பூர்வமாக புகார் பெற்றார். பின்னர் அந்த புகாரை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன், போலீஸ்காரர் சரவணன் ஆகியோர், அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. வீட்டிற்கு வந்து அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி விட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதியப்பட்டதை தொடர்ந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும் அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விசாரணை அதிகாரிகள் நியமனம்

இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின் படி இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளாக 2 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், வழக்கின் புலன் விசாரணையை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.காமினி கண்காணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கு எதிரான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று மாலை கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஷக்னாஸ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் சேகர் ஆகியோருடன் இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த வழக்கில் யார்? யாரை எல்லாம் சாட்சியாக சேர்ப்பது என்பது தொடர்பாக அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

3 பேரிடம் விசாரணை

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் பாதுகாவலர், கலெக்டரின் நேர்முக எழுத்தர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களிடம் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பாக அவர்களுக்கு தெரிந்த விவரங்களை கேட்டறிந்து அவர்களின் வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்து கொண்டனர். சுமார் 3 அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணையானது நடைபெற்றது. அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

எம்.எல்.ஏ.வுக்கு சம்மன்

இந்த நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.விடம் சிறிது நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அவரிடம் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர். ஆனால் அதனை அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து போலீசார் அந்த சம்மனை அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.வின் மனைவியிடம் கொடுத்தனர். இன்றே அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்து விட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

போலீசார் சம்மன் வழங்கியுள்ள நிலையில் அவர் விசாரணைக்கு இன்று ஆஜராவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நேற்று முதல் அவர் தனது வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. வீட்டிற்கு வந்த கட்சியினரையும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் தனது வக்கீலுடன் அவர் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை அதிகாரி இன்று வருகை

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகிறார். அவர் நேரடியாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது விசாரணையை தொடங்க உள்ளார்.

அப்போது அவரிடம் அனைத்து மகளிர் போலீசார், எம்.எல்.ஏ. மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, இதுவரை சேகரிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளனர். ஆவணங்களை பெற்றுக் கொண்டவுடன் அவர், தனது அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ளார்.

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.வை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதற்கான முழு ஆதாரங்களையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.

அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று போலீசார் சம்மன் வழங்கியுள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X