

சென்னை கோயம்பேடு நியூ காலனியில் 4ம் வகுப்பு மாணவன் தருண், தாயான பூவரசியின் கள்ளக்காதலன் தமிழ்ச்செல்வன் கையால் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்த பூவரசி, தமிழ்ச்செல்வனுடன் கடந்த மாதங்களாக சேர்ந்து இருந்த நிலையில், அடிக்கடி ஏற்பட்ட தகராறுகள் நேற்று இரவு உச்சக்கட்டத்தை எட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேடு, நியூ காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் பூவரசி. இவரது மகன் தருண் (வயது9). அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பூவரசி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் பூவரசிக்கு கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் வேலை பார்த்து வரும் தமிழ்ச்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 3 மாதங்களாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
நேற்று இரவு பூவரசியும், தமிழ்ச்செல்வனும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து தனியாக தமிழ்ச்செல்வன் மட்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
வீட்டுக்கு வந்த தமிழ்ச் செல்வன், செல்போன் மூலம் பூவரசியை தொடர்பு கொண்டு “உன் மகனை கொல்லப் போகிறேன்” என்று கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் தொடர்பு கொண்ட அவர், “தருணை கொன்று விட்டேன்” என்று கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூவரசி விரைந்து வீட்டிற்கு சென்றபோது அங்கு மகன் தருண் பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார். மகன் தருணை கழுத்தை நெரித்து துடிக்க, துடிக்க கொலை செய்து விட்டு கள்ளக்காதலன் தமிழ்ச்செல்வன் தப்பி ஓடி இருப்பது தெரிந்தது.
தகவல் அறிந்ததும் கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட மாணவன் தருணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான தமிழ்ச்செல்வனை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. கணவரை பிரிந்து வாழ்ந்த பூவரசிக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக அவர்கள் சேர்ந்து வாழ்ந்து உள்ளனர். பூவரசியின் செல்போனுக்கு வேறு சில நபர்களிடம் இருந்து அடிக்கடி அழைப்பு வந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வன், பூவரசியை கண்டித்து வந்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வனும், பூவரசியும் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்த போது அங்கிருந்த சில பெண்களுடன் தமிழ்ச்செல்வனுக்கு வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தமிழ்ச்செல்வனை அந்த பெண்கள் தகாத வார்த்தையால் பேசி உள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த தமிழ்ச்செல்வன் அந்த பெண்களை தட்டிக்கேட்காதது ஏன்? என்று கேட்டு பூவரசியை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்ச் செல்வன் தனது கையை அறுத்து கொண்டு உள்ளார்.
இது பற்றி அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். காயம் சிறியதாக இருந்ததால் தமிழ்ச்செல்வனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் அங்கேயே விட்டு சென்றதாக தெரிகிறது.
இதன் பின்னரும் பூவரசி மீது ஆத்திரம் அடங்காத தமிழ்ச்செல்வன் கோயம்பேட்டில் இருந்து தனியாக வீட்டிற்கு சென்று இரக்கமின்றி சிறுவன் தருணை கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்து இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய தமிழ்ச்செல்வனை போலீசார் தேடிவருகிறார்கள்.