

இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து, அதிகாரப்பூர்வத் தகவல்களை பொதுவெளியில் வெளியிடுமாறு, மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழுத்தர் ஜி. தேவராஜன் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், வி. எஸ். பாபுவின் உடல்நிலை தொடர்பாக சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் அளித்த மனுக்களை பரிசீலிக்க சுகாதாரத் துறைச் செயலாளர், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.
வாக்காளர்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் உடல்நிலை குறித்தும், தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க மாற்று நிர்வாக ஏற்பாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் உண்மையான தகவல்களைப் பெற உரிமை உண்டு என்றும், முன்னதாக அதிகாரிகளிடம் அளித்த மனுவுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கொளத்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்றவர் வி.எஸ்.பாபு.
இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக்கோளாறு பிரச்சனைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று அமிஞ்சிக்கரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நலன் தேறி வருவதாகவும், செப்.22 வரை வந்த மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. அதன்பின்னர் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
அதேவேளையில், பாபு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சர் அருண்ராஜ் இம்மாத தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.