நீலகிரியில் நிலச்சரிவை முன்கூட்டியே கண்டறிய 125 இடங்களில் ‘சென்சார்’ கருவிகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
நீலகிரியில் நிலச்சரி
நீலகிரியில் நிலச்சரி
Published on: 
Summary

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள மேலும் 125 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சென்சார் கருவிகளை பொருத்துவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த 23-ந்தேதி பெய்த கனமழையால் பர்லியார் பகுதியில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மண் சரிவில் அரசு பஸ் சிக்கிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

65 இடங்களில் மண்சரிவு

இதனைத்தொடர்ந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் இந்த பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சுமார் 65 இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்தன.

இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் ஏற்கனவே 6 முக்கிய இடங்களில் சோதனை அடிப்படையில் நவீன சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.

சென்சார் கருவிகள்

இந்த முயற்சியின் பலன்களை தொடர்ந்து திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள மேலும் 125 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சென்சார் கருவிகளை பொருத்துவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழக பேரிடர் மீட்புத்துறை ஆராய்ச்சியாளர் குணால் தலைமையிலான குழுவினர் குன்னூர், பர்லியார் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்று ஊட்டி லவ்டேல், தலையாட்டுமந்து, கோடப்பமந்து, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் குணால் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள 125 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்த பிறகு, கனமழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே எச்சரிக்கை தகவல்களை அளிக்கும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்படும் என்றார்.|

எச்சரிக்கை

இந்த நவீன சென்சார் கருவிகள் மண்ணின் ஈரப்பதம், நிலத்தின் அசைவுகள், பாறைகளின் நகர்வு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கும். நிலச்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும்போது, கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் வகையில் இக்கருவிகள் செயல்படும்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் உயிரிழப்புகளையும் பொருட்சேதங்களையும் குறைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X