

கோவை காந்திபுரத்தில் ரூ. 300 கோடி செலவில், 1,98,000 சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதற்காகவும் தீவிர சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பொது நூலகத்தைத் திறந்து வைக்கவுள்ள அவர், உடனடியாகக் கேரளா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, சிறைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் ‘பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் மொத்தம் 1,98,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில், ஒரு லட்சம் புத்தகங்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள், கோளரங்கம், ஆராய்ச்சிப் படிப்பகங்கள் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்டமான அறிவு மையத்தைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சத்யா விமான நிலையம் சென்று, அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் இடத்திற்குப் பயணிக்கிறார்.
கோவையில் திறப்பு விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டவுடன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா மாநிலம் திருச்சூருக்கு முதல்வர் விஜய் பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள பிரபல தொழிலதிபரான கல்யாண் குழுமத்தின் தலைவர் டி.எஸ்.கல்யாணராமன் இல்லத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ள நவரத்திரி திருவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
மேலும், இந்தப் பயணத்தின் இடையே புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்குச் சென்று கனக துர்கை அம்மன் கோயிலில் தரிசனம் செய்ததும், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்தத் தொடர் பயணங்கள் அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.