பழவேற்காடு ஏரியில் படகில் உடல்களை கொண்டு செல்லும் மக்கள்

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் உடல்களை படகில் கொண்டு சென்று இறுதிசடங்கு செய்தனர்.
உடல்களை படகில் கொண்டு செல்வதை படத்தில் காணலாம்.
உடல்களை படகில் கொண்டு செல்வதை படத்தில் காணலாம்.
Published on: 
Summary

மீனவ கிராமத்தில் இருந்து உடல்களை தோளில் சுமந்து செல்லும் போது பழவேற்காடு ஏரியின் சேற்றில் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது.

பழவேற்காடு, கோட்டைக் குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பழ வேற்காடு ஏரியை கடந்து செல்லும் நிலை உள்ளது.

சுடுகாடு

கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் சுரேந்தர் மற்றும் பிரேமா ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர். சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் உடல்களை படகில் கொண்டு சென்று இறுதி சடங்கு செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மீனவ கிராமத்தில் இருந்து உடல்களை தோளில் சுமந்து செல்லும் போது பழவேற்காடு ஏரியின் சேற்றில் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் பழவேற்காடு ஏரியை கடந்து செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் ஏரியின் தண்ணீரில் இறங்கி சடலத்தை சுமந்தபடி செல்லும் நிலை நீடிக்கிறது. ஏரியின் ஓரத்தில் உள்ள கால்வாயை கடப்பதிலும், சேறு, முட்புதர் மண்டிய நிலையில் சகதியில் இறங்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

படகு

இதன் காரணமாக கிராமத்திலிருந்து சடலங்களை எடுத்து கொண்டு படகுகளில் ஏற்றி வைத்து ஏரியை கடந்து செல்கின்றனர். மறு கரைக்கு சென்று சடலத்தை தண்ணீரில் இறக்கி மீண்டும் தோளில் சுமந்து கொண்டு சுடுகாட்டுக்கு சென்று இறுதி சடங்குகளை செய்து வருகின்றனர். எனவே கோட்டைக்குப்பம் கிராமத்தில் இருந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல அரசு உரிய முறையில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும். இது தொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.

X