

சாலை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக மலை கிராமமக்கள் போராடி வரும் நிலையில், அலகட்டு மலை கிராமத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு அமைத்து கொடுக்க வேண்டும் என மலை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் வட்டுவனஹள்ளி ஊராட்சி அலகட்டு மலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மருத்துவம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சமதாள பகுதிக்கு வர வேண்டுமென்றால், 7 கி.மீ அடர்ந்த வனப்பகுதியில் நடந்து வரவேண்டும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு அலக்கட்டு மலை கிராமத்தை சேர்ந்த இளம்பெண் மல்லிகாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, வலியால் துடிதுடித்துள்ளார். இதனால் மருத்துவமனைக்கு செல்ல டோலி கட்டி, டார்ச் மற்றும் செல்போன் வெளிச்சத்தில், 7 கி.மீ அடர்ந்த வனப்பகுதியில் நடந்தே சென்றனர்.
கனமழையால் ஆங்காங்கே சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டும், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டும் இருப்பதால், தண்ணீரில் இறங்கி மிகுந்த சிரமப்பட்டு, தரைப்பகுதிக்கு வந்து, ஆட்டோ மூலம் பாலக்கோடு அரசு மருந்நுவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து சாலை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக மலை கிராமமக்கள் போராடி வரும் நிலையில், அலகட்டு மலை கிராமத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு அமைத்து கொடுக்க வேண்டும் என மலை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.