

செஃப் தாமுவின் மறைவுச் செய்தி கேட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அடையாளமாகவும், உலகளவில் அறியப்பட்ட முன்னணி சமையல் கலைஞருமான செஃப் தாமு என்று அன்போடு அழைக்கப்படும் கே.தாமோதரன் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சமையற்கலையில் தனது தனித்துவமான திறமையாலும், கலகலப்பான பேச்சாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்த செஃப் தாமுவின் மறைவு சமையல் கலைத்துறைக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் பேரிழப்பாகும். கடந்த 2010ஆம் ஆண்டில், தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற பெருமைமிக்க சாதனையைப் படைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர் செஃப் தாமு. சமையற்கலையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் செஃப் என்ற பெருமைக்குரிய இவர், தமிழ் பாரம்பரிய சமையலை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றதில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளார். சமையற்கலைக்கு இவர் ஆற்றிய சிறப்பான சேவைகளைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு உயரிய பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செஃப் தாமுவின் மறைவுச் செய்தி கேட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் சமையற்கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக இல்லம்தோறும் பரிச்சயமான இவரது மறைவு, திரைத்துறையினர், சமையற்கலை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.