

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழவேண்டும் என நினைத்து கோவில் நகைகளை கொள்ளையடித்து அவரிடம் கொடுத்து உள்ளார். அந்த நகைகளை உருக்கி பிரபாகரன் விற்பனை செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இடும்பன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் பழனி டவுன் போலீஸ் நிலையத்திலும், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறையிலும் புகார் அளித்தார். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக கோவில் தர்க்கார் ராஜாவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோவிலில் நகைகள் மாயமாகவில்லை. திருடு போய் உள்ளது. எனவே உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தியதில் கோவிலில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்த பெண்ணே நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
பழனி அடுத்துள்ள பாப்பம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மகள் நிரஞ்சனா (வயது 25). கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். செயல் அலுவலராக விமலா பணிபுரிந்து வந்தபோது அவருக்கு தெரியாமல் சாவியை எடுத்து தங்கம், வெள்ளி நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக அவர் திருடிச் சென்றுள்ளார். நிரஞ்சனாவுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பிரபாகரன் (34) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அதிகரித்து கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழவேண்டும் என நினைத்து கோவில் நகைகளை கொள்ளையடித்து அவரிடம் கொடுத்து உள்ளார். அந்த நகைகளை உருக்கி பிரபாகரன் விற்பனை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து திருடி உருக்கப்பட்ட 20 பவுன் தங்கக்கட்டி மற்றும் 3 கிலோ வெள்ளியை கைப்பற்றினர். இவர்கள் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் செயல் அலுவலர் நகை திருட்டு குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த நிரஞ்சனா தனக்கும் இந்த திருட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை போல அப்பாவியாக காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.