சோதனை ஓட்டம் முடிந்து பழனியில் 22-ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் இயக்கம்: கோவில் நிர்வாகம் தகவல்

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வருடத்திற்கு ஒரு மாதம் ரோப் கார் இயக்கம் நிறுத்தப்படும்.
பழனி கோவில் ரோப் கார்
பழனி கோவில் ரோப் கார்
Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யானைப்பாதை, படிப்பாதை வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதுதவிர குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் சிரமமின்றி சென்று வர மின் இழுவை ரெயில், ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு 3 நிமிடத்தில் சென்று விடலாம் என்பதாலும், இயற்கை எழில் கொஞ்சும் பழனி மலையை கண்டு ரசிக்கலாம் என்பதாலும் ரோப்காரில் செல்ல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பக்தர்கள் பாதுகாப்புக்காக ரோப்கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 1 மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.

பராமரிப்பு பணிகள்

அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூலை 20-ம்தேதி முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரோப்கார் தொடர்பான அனைத்து எந்திரங்களும் என்.டி.டி. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சாப்ட் பொருத்தப்பட்டு, கியர் பாக்ஸ் பராமரிப்பு பணியும் நடந்தது. மேலும் கடந்த 16-ம் தேதி புதிய பெட்டிகளை பொருத்தி, மணல் மூட்டைகள், கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ரோப்கார் கீழ்நிலைய பெருந்திட்ட பணிகளில் எந்திரங்கள் உள்ள பகுதிகளில் புதிய மேற்கூரை, பால்சீலிங், பக்கவாட்டு சுவர்களில் கிரானைட் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. மராமத்து பணிகள் முடிவடைந்த நிலையில் வல்லுனர்குழு ஆய்வும் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (22ம் தேதி) முதல் மீண்டும் ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கும் என பழனி கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அலைமோதிய பக்தர்கள்

வார விடுமுறையான இன்று கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாைத, படிப்பாதை, மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது. பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் யானைப்பாதை, படிப்பாதை வழியாக சென்ற பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com