

விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
படப்பை அடுத்த ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது42). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு ஆதனூர் ஏரிக்கரை ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு சென்றார். அப்போது எதிர் திசையில் கூடுவாஞ்சேரியில் இருந்து மண்ணிவாக்கம் நோக்கி சென்னையைச் சேர்ந்த லோகேஷ்(26) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
திடீரென இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த நாராயணன், லோகேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணன், லோகேஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.