

கடந்த சில நாட்களாகவே வறண்டு கிடந்த இந்த அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் அறிகுறியாக முதல் நாளே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
விடிய விடிய மழை
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை தேனி, ஆண்டிபட்டி, வீரபாண்டி, பெரியகுளம், சோத்துப்பாறை, போடி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இதனால் மாவட்டத்தின் முக்கிய அருவிகளான கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே வறண்டு கிடந்த இந்த அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்துக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கண்மாய்கள், குளங்கள், ஊரணிகளில் நீர் நிரம்ப வாய்ப்புள்ளதால் வெள்ளப்பெருக்கின் போது அவசர கால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். பெரியவர்கள், குழந்தைகளை ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் குளிக்க, துணி துவைக்க அனுப்ப வேண்டாம்.
வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பு குழுவினர் மற்றும் வட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1071 மற்றும் 04546 - 261093 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சங்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியை மழை நீர் சூழ்ந்தது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியடைந்தனர்.
குரங்கணி, கொட்டக்குடி, பீச்சாங்கரை, ஊத்தம்பாறை பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்த மழையினால் அணைப்பிள்ளையார் தடுப்பணையை கடந்து வெள்ள நீர் செல்கிறது. கனமழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 43.24 அடியாக உள்ளது. வரத்து 400 கன அடி. திறப்பு 86 கன அடி. இருப்பு 1228 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக உள்ளது. வரத்து 613 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 2015 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது. வரத்து 43 கன அடி. இருப்பு 54.63 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 108.08 அடியாக உள்ளது. வரத்து 62 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 71.50 மி.கன அடி.
ஆண்டிபட்டி 102, அரண்மனைபுதூர் 20.4, வீரபாண்டி 16.4, பெரியகுளம் 147, மஞ்சளாறு 79, சோத்துப்பாறை 67, வைகை அணை 124.2, போடி 22.6, உத்தமபாளையம் 2.8, கூடலூர் 17.6, பெரியாறு அணை 12, தேக்கடி 33.4, சண்முகாநதி 4.6 என ஒரே நாளில் 649 மி.மீ மழை அளவு பதிவானது.