சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட்

மக்களின் கைப்பேசி எண்களுக்கு எச்சரிக்கை ஒலியுடன்கூடிய அவசரகால குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
File Pic
Published on: 

சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட நிலையில், சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சனிக்கிழமை காலையில் இருந்தே பரவலாக மழை பெய்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்ய தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

அவசரகால குறுஞ்செய்தி:

சென்னை பாரிமுனையில் அதிகபட்சமாக 364 மி.மீ. மழை பதிவானது. கத்திவாக்கத்தில் 344 மி.மீ., மீனம்பாக்கத்தில் 280 மி.மீ., சென்ட்ரலில் 270 மி.மீ., திருவொற்றியூரில் 220 மி.மீ., எண்ணூரில் 210 மி.மீ. மழை பதிவானது.

ஞாயிற்றுக்கிழமை அதிபலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சாா்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பேரிடா் காலங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை மற்றும் புறநகா் பகுதி மக்களின் கைப்பேசி எண்களுக்கு எச்சரிக்கை ஒலியுடன்கூடிய அவசரகால குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், இந்த சிவப்பு எச்சரிக்கை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திரும்பப் பெறப்பட்டது.

வளிமண்டல சுழற்சி:

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "லட்சத்தீவு பகுதிகள் முதல் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை கா்நாடகம், தெற்கு ஆந்திரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வட உள் கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேலும், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, தமிழக கடலோரம் வரை வடமேற்கு வங்கக் கடல் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

பலத்த மழை எச்சரிக்கை:

ஆரஞ்சு எச்சரிக்கை: இதன் காரணமாக சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக். 19) ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை: நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, புறநகா் பகுதிகளில் இன்று (அக். 19) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கும், இடையிடையே ஓரிரு முறை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com