

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்படும் பல்வேறு வகையான மலர்ச்செடிகள், அரிய தாவரங்கள் மற்றும் அலங்காரச் செடிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள கள்ளிச்செடியில் 100-க்கும் மேற்பட்ட மலர்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்குவது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அரும்பாக இருக்கும்போது ஒரு நிறத்திலும், முழுமையாக மலர்ந்த பிறகு மஞ்சள் நிறத்திலும் காட்சியளிக்கும் இந்த மலர்கள், செடி முழுவதும் கொத்து கொத்தாக பூத்து உள்ளன.
முட்களுடன் காணப்படும் கள்ளிச்செடியில் இவ்வளவு அதிகமான மலர்கள் பூத்திருப்பது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. மேலும் அந்த செடி முழுவதும் மஞ்சள் நிற மலர்கள் நிறைந்து காணப்படுவதால், பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். மேலும் கள்ளிச்செடியில் பூத்து நிற்கும் மலர்களின் அழகிய தோற்றம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மலர் பிரியர்களையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.