மண்ணும், நீரும் கலந்து வந்து பஸ்சை அமுக்கியது- மீட்கப்பட்ட கண்டக்டர் பேட்டி

பஸ்சில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தோம். அப்போது டிரைவரும், நானும் மட்டுமே இருந்தோம்.
மண்ணும், நீரும் கலந்து வந்து பஸ்சை அமுக்கியது- மீட்கப்பட்ட கண்டக்டர் பேட்டி
Published on: 
Summary

மழைநீர் பெருக்கெடுத்து மண்ணாக ஓடி வந்தது. நாங்கள் சுதாரிப்பதற்குள் மண்சரிவு ஏற்பட்டு பஸ்சை முழுமையாக அமுக்கியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை கொட்டியது.

மண்சரிவு

இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்தகோபால் பாலம் முதல் பர்லியார் வரை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

அரசு பஸ் சிக்கியது

இதற்கிடையே ஊட்டியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மண் சரிவில் சிக்கிக் கொண்டது. பர்லியார் மலைப்பாதையின் கீழ் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. திடீரென அந்த பாதையில் மண்சரிவு ஏற்பட்டு அரசு பஸ் மீது விழுந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர். முதல்கட்டமாக பஸ் கண்டக்டரை பத்திரமாக மீட்டனர். அவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அரசு பஸ் கண்டக்டர் கேசவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குன்னூரில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில் நானும், டிரைவர் ஜனகராஜூம் பணியில் இருந்தோம். மழை காரணமாக பஸ்சில் ஒரு சில பயணிகளே இருந்தனர். அவர்களும் முன்கூட்டியே இறங்கிக் கொண்டனர். இன்று அதிகாலை பஸ்சில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தோம். அப்போது டிரைவரும், நானும் மட்டுமே இருந்தோம்.

பர்லியார்

பர்லியார் அருகே வந்த போது மலைப்பாதையில் திடீரென 2 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இனிமேல் பஸ்சை இயக்கினால் ஆபத்து என கருதி ரிவர்ஸ் எடுத்து பாதுகாப்பான பகுதியில் நிறுத்தலாம் என டிரைவர் கூறினார்.

மண்சரிவு

சற்று தள்ளிச்சென்று பஸ்சை நிறுத்தமுயன்றார். அதற்குள் மழைநீர் பெருக்கெடுத்து மண்ணாக ஓடி வந்தது. நாங்கள் சுதாரிப்பதற்குள் மண்சரிவு ஏற்பட்டு பஸ்சை முழுமையாக அமுக்கியது.

பல மணி நேரம் நான் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தேன். மீட்புக்குழுவினர் என்னை மீட்டு வந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com