விளையாட்டு துறைக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கீடு- உதயநிதி கண்டனம்

சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருகிறது.தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.
விளையாட்டு துறைக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கீடு- உதயநிதி கண்டனம்
Published on

விளையாட்டு துறைக்கு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது;-

கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு & இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பதற்கான சான்றாக உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்துக்கும் – குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

உலக செஸ் போட்டி – ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் – தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – World Surfing League – Squash World Cup- Khelo India Youth Games 2023 என பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறோம்.

சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருகிறது.

விளையாட்டுத்துறையில் இத்தனை ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கியிருப்பதை நம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

இது தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பா.ஜ.க.வின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com