

சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 251 ரேசன் கடைகளிலும், நுகர்வோர் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 350 அமுதம் கூட்டுறவு ரேசன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை வாங்கி கொள்ளலாம்.
சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருந்து வரும் பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை ரேசன் கடைகள் மூலமாக குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்ய முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.
இதன்படி நகர்புறங்களில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கான முதல் விற்பனையை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் காந்தி ராஜன் ஆகியோர் இன்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள ரேசன் விலைக் கடையில் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் அமுதா, மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொது மக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதார சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் முதற் கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.
நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 8,914 கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் அனைவரும் இன்று முதல் தங்களுக்குரிய ரேசன் விலைக் கடைகளை அணுகி, கிலோ ரூ.35- என்ற மானிய விலையில் வெங்காயத்தைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 251 ரேசன் கடைகளிலும், நுகர்வோர் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 350 அமுதம் கூட்டுறவு ரேசன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை வாங்கி கொள்ளலாம்.