

பாத்திரத்துக்குள் தலை சிக்கி தவித்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி சம்பவத்தன்று வீட்டில் சமைத்து கொண்டு இருந்தார். அப்போது அவர்களின் 1½ வயது பெண் குழந்தை யாசனாஸ்ரீ வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.
இந்த நேரத்தில் அந்த குழந்தை வீட்டில் கிடந்த சமையல் பாத்திரத்தை உருட்டியபடி இருந்தது. அப்போது அந்த குழந்தையின் தலை எதிர்பாராத விதமாக பாத்திரத்துக்குள் சிக்கி கொண்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பாத்திரத்தில் இருந்து குழந்தையின் தலையை எடுக்க முயன்றும் பலனில்லை.
இதனால் அந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் நிலைய இயக்குனர் ஜெகதீஸ் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பாத்திரத்துக்குள் தலை சிலை சிக்கி தவித்த பெண் குழந்தையை மீட்கும் பணி தொடங்கியது.
அப்போது தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை உரிய பாதுகாப்பு கருவி உதவியுடன் மெதுவாக அறுத்து லாவகமாக வெட்டி எடுத்தனர். பின்னர் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
பாத்திரத்துக்குள் தலை சிக்கி தவித்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.