ஆட்டோ டிரைவரை வெட்டி கொன்ற முதியவர் கைது: மேலும் 2 பேருக்கு வலை

நேற்று இரவு பார்த்திபன் வழக்கம்போல் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைதான கருப்பையா.
கைதான கருப்பையா.
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள கைலாசபட்டியை சேர்ந்தவர் பார்த்திபன். (வயது 27). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கருப்பையா (வயது 55). இவருக்கும் ஆட்டோ டிரைவரான பார்த்திபனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தினந்தோறும் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பார்த்திபன் பேசி வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு பார்த்திபன் வழக்கம்போல் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது கருப்பையா அதை தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அதனை தொடர்ந்து கருப்பையா, அவரது மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய மூவரும் சேர்ந்து பார்த்திபனை அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பார்த்திபன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த பார்த்திபனின் தம்பியும் காயமடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தென்கரை போலீசார் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்திபனை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே பார்த்திபன் இறந்த செய்தி அறிந்ததும் போலீசார் கருப்பையாவை தேடிவந்த நிலையில் அவர் தானாக முன்வந்து தென்கரை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கருப்பையாவின் மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய 2 பேரும் தலைமறைவாகினர். படுகாயம் அடைந்த பார்த்திபனின் தம்பி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பார்த்திபனின் மனைவி பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com