

தனியார் பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்ந்து, ஆவின் பாலை விட 30 ரூபாய் வரை அதிகமாக இருப்பதால் மக்கள் பெருமளவில் ஆவின் பால் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் 3 வகை ஆவின் பாலும் கடைகளில் சில நிமிடங்களில் விற்று தீர்கிறது. அரசு கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்தி, அக்டோபர் 15 முதல் சப்ளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை எப்பொழுதுமே குறைவாக இருப்பதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. இந்த ஆண்டில் மட்டும் தனியார் பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆவின் பாலை விட லிட்டருக்கு 30 ரூபாய் வரை தனியார் பால் விலை உயர்வாக உள்ளதால் தேவை அதிகரித்தது. தனியார் பாலை வாங்கியவர்கள் பெரும்பாலானவர்கள் தற்போது ஆவின் பால் பக்கம் திரும்பியதே தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாகும்.
ஆவின் பால் விற்பனைக்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் கடைகளில் கிடைப்பதில்லை. 3 வகையான ஆவின் பால்களும் உடனே விற்று விடுகின்றன. முன்பெல்லாம் கடைகளில் கேட்கும் போதெல்லாம் கிடைப்பது உண்டு.
ஆனால் கடந்த 2 மாதமாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களின் தேவை அதிகரித்து உள்ளதால் அந்த அளவிற்கு ஆவின் நிர்வாகத்தால் பால் சப்ளை செய்ய முடியவில்லை. தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் அதன் கொள்முதலை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்ததோடு ஆவின் நிறுவனத்துக்கு கூடுதலாக பாலை தருவதற்கு முன் வந்துள்ளனர்.
இதற்கிடையில் சென்னையில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவின் பாலை வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில் அன்றாடம் பயன்படுத்தும் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் ஆவின் பால் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆவின் பால் எப்பொழுதும் போல் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 31.56 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 14.50 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது. பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டர் ஆக உள்ளது.
பால் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆவின் பால் விலை குறைவாக இருப்பதுதான். தனியார் பாலை விட பச்சை நிற பாக்கெட் பால் லிட்டருக்கு 30 ரூபாய் குறைவாகவும், ஆரஞ்சு பால் லிட்டருக்கு 26 ரூபாய் குறைவாகவும், நீல நிற பாக்கெட் பால் லிட்டருக்கு 22 ரூபாய் குறைவாகும் உள்ளது. இந்த விலை வேறுபாடுதான் பொதுமக்களிடையே தற்போது தேவையை அதிகரித்துள்ளது.
இதுவரையில் தனியார் பால் வாங்கியவர்கள் தற்போது ஆவின் பால் வாங்க விரும்புகின்றனர். ஆவின் பால் சப்ளை குறைக்கப்படவில்லை. தேவை அதிகரித்து வருவதால் அந்த அளவுக்கு உடனடியாக கொள்முதலை அதிகரித்து வினியோகம் செய்வது சிரமம்.
அக்டோபர் மாதம் 15-ந்தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய தேவையை அதன் மூலம் சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.