

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் 3-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மழைநீர் தேங்காத வகையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.
சென்னையில் நேப்பியர் பாலம், கூவம் ஆற்றின் முகத்துவாரம், முகப்பேரில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாக துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார் அவருடன் சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் துரிதப்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக சென்னையில் முன்னேற்பாடு பணிகள் விரைவு படுத்தபட்டுள்ளது.
சென்னை நகருக்குள் ஓடும் ஆறுகளை தூர்வார்வதுடன், வடிகால் வசதிகளை செப்பனிட கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் விரைவு படுத்தப்பட்டு உள்ளன.
சென்னையில் நடை பெறும் குறுகிய கால பணிகளை அடுத்த மாதம் அக்டோபர் 10-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளோம். அதேசமயம் நீண்டகால பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
பருவ மழையையொட்டி அனைத்து வித முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஒப்பந்ததாரர்களிடமும் இதுகுறித்து அறிவுறுத்தி இருக்கிறோம்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் மழை நீர் தேங்குவதால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அங்கு தேங்கும் மழை நீர் ஓட்டேரி நல்ல கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
வடசென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. எனவே முகப்பேர் சாலை வழியாக கூவம் ஆற்றில் திருப்பி விடும் பணியும் நடந்து வருகிறது. இதில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.