

கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்த கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் இருந்து அடையாறு ஆறு தொடங்கும் ஜீரோ பாயின்ட்டில் உள்ள மாடம்பாக்கம் மற்றும் ஆதனூர் நீர்வரத்து கால்வாய், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட சிற்பி நகர் சிங்கார நகரினை இணைக்கும் 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலப்பணியை செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் மற்றும் தொகுதி எம்எல்ஏ தியாகராஜன் ஆகியோர் நேற்று காலை திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் லதா நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அப்போது இப்பகுதிகளில் வடிகால்வாய், வாய்க்கால் கட்டமைப்பு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் மற்றும் ஊரப்பாக்கம் எல்லை பகுதிகளில் இருந்து அடையாறு ஆறுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அனைத்து பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் அறிவுறுத்தினர்.