சென்னை - மதுரையில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.
NIA Raid
Published on

நாடு முழுவதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

என்.ஐ.ஏ.

போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் தீவிரவாத குழுக்களும் செயல்பட்டு வருவதால் என்.ஐ.ஏ. என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தொடர்ந்து அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுபோன்ற சோதனை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே பல முறை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் சோதனை

அந்த வகையில் தமிழகத்தில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் வண்ணாரப்பேட்டை, திருமுல்லைவாயில், போரூர் உள்பட 6 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை

மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

3 மணி நேரம் வரை நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனையை முடித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சோதனை காரணமாக தனியார் குடியிருப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அந்தமான்

அந்தமானில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ.அதிகாரிகள் மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் தடுப்பு சோதனை யை மேற்கொண்டனர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் நாடு முழுவதும் பல்வேறு நபர்களோடு தொடர்பில் இருந்தபடி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

தொழில் அதிபா்கள்

அந்தமானில் பிடிப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்திற்கும் போதைப் பொருட்களை கடத்தி புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்று சென்னையில் 6 இடங்களில் ஒரே நேரத்தில் டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தொழில் அதிபா்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சோதனை தொடர்பான விரிவான தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

சோதனை முடிவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுப்பதற்கு தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அமைப்புகளில் ஒன்றான என்.ஐ.ஏ.வும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com