

புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக இன்று நடைபெற இருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை தெரிவித்தது. கூட்டத்தில் பங்கேற்க எழுத்துப்பூர்வமான அழைப்பு எதுவும் வராததால், கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அந்த அமைப்பு கூறிவிட்டது. திருவல்லிக்கேணி முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள 13 கிராம மக்களும் இதே நிலையை தெரிவித்தனர். இதனால் இன்று நடைபெற இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை மாவட்ட கலெக்டர் திடீரென தள்ளி வைத்துள்ளார்.
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்தது முதலே, அங்கு ஏகப்பட்ட பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலக வளாகம் மற்றும் சட்டசபை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பட்டினப்பாக்கம் பகுதியில் மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலங்களும் அடங்கும்.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு 3 மாதங்களுக்குள் டி.பி.ஆர். எனப்படும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கவும், அடுத்தகட்ட பணிகளை தொடங்கவும் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, தலைமை செயலகம் அமைய உள்ள நிலத்தின் பயன்பாட்டு வகைப்பாட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்பு பயன்பாட்டில் இருந்த 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்கு மாற்ற சி.எம்.டி.ஏ. குழுமக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனாலும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு அந்தப் பகுதியை சேர்ந்த மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் தான், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவ அமைப்புகளின் கருத்துகளைக் கேட்க இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மீன்வளத்துறை சார்பில் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளை நேற்று கைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் ஓரிரு பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3.82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 96 பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரப்பட்டதால் மீனவ கிராமங்களில் பதட்டமும் எதிர்ப்பும் கிளம்பியது.
பட்டினப்பாக்கத்தில் பழைய குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வேகமாக பரவியது. ஆனால், பழைய குடியிருப்புகளை இடிப்பதற்கு தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளே காரணம் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக இன்று நடைபெற இருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை தெரிவித்தது. கூட்டத்தில் பங்கேற்க எழுத்துப்பூர்வமான அழைப்பு எதுவும் வராததால், கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அந்த அமைப்பு கூறிவிட்டது.
திருவல்லிக்கேணி முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள 13 கிராம மக்களும் இதே நிலையை தெரிவித்தனர். இதனால் இன்று நடைபெற இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை மாவட்ட கலெக்டர் திடீரென தள்ளி வைத்துள்ளார்.
இன்றைக்கு பதிலாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.