

தமிழகத்தில் போதுமான பருவமழை இல்லாத நிலையில், 30-ந்தேதி தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மழைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். புயலாக மாறும் சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதால், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 45 நாட்கள் முடிந்துள்ள நிலையில் போதுமான மழைப்பொழிவு இதுவரையில் இல்லை.
அக்டோபர் மாதம் சராசரியாக கிடைக்க வேண்டிய 17 செ.மீ. மழை பெய்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் செய்ய வேண்டிய 18 செ.மீ. மழை பற்றாக்குறையாக உள்ளது. போதுமான அளவு தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இந்த நிலையில் நாளை மறுநாள் 29-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக 30-ந்தேதி வாக்கில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறியதாவது:-
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 30-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது டிசம்பர் 2-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வு மற்றும் தீவிரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ வலிமையாக இருக்கிறது. அதனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது பற்றி தற்போது கணிக்க இயலாது. தற்போதைய நிலவரப்படி அவை புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளது. தாழ்வு பகுதி உருவான பின்னர் அவை எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை கணிக்க முடியும்.
தமிழகம் அல்லது இலங்கை நோக்கி நகருமா? கனமழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி தற்போது உறுதியாக கூற இயலாது. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.