

நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் 6 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே கேரளத்தில் மழை பெய்து வந்த நிலையில் இரவு பாறசாலை, நெய்யாற்றின்கரை, திருவ னந்தபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது.
இன்று அதிகாலையிலும் குமரி மாவட்ட எல்லையில் இருக்கும் களியக்காவிளை அருகே உள்ள பாறசாலை மற்றும் நெய்யாற்றின்கரை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதிகாலை 2 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது, பாறசாலை- நெய்யாற்றின் கரை இடையே ரெயில் தண்டவாளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்பூரில் இருந்து நெல்லைக்கு வந்த அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்ததை பிலாஸ்பூர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினின் பைலட் பார்த்து விட்டார்.
அவர் உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்த முயன்றார். இருப்பினும் ரெயிலின் என்ஜின் மண் சரிவில் சிக்கியது. இதனால் ரெயில் என்ஜின் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. என்ஜினின் முன்பக்கத்தில் இருந்த 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு தரையில் இறங்கின. அதேநேரத்தில் ரெயிலும் நின்றுவிட்டது.
ரெயில் தண்டவாள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது குறித்தும், அதில் சிக்கி பிலாஸ்பூர்- நெல்லை ரெயில் என்ஜின் தடம் புரண்டது பற்றியும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட திருவனந்தபுரத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மீட்டு பணியை ஊழியர்கள் தொடங்கிவிட்டனர். சுமார் 5 மணி நேரம் போராடி தண்டவாள பகுதியில் கிடந்த மண்ணை அகற்றினர்.
இதற்கிடையே தடம் புரண்ட ரெயில் என்ஜினை மீட்பதற்காக நெல்லையில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு மீட்பு வாகனம் சம்பவம் நடந்த இடமான பாறசாலை ரெயில் நிலையத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது. பின்பு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியிருந்த ரெயில் என்ஜினை தூக்கி மீண்டும் தண்டவாளத்தில் வைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு என்ஜின் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தண்டவாளத்தில் கிடந்த எஞ்சிய மண்ணையும் ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியை தொடர்ந்தனர். தொடர்ந்து பிலாஸ்பூர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பகுதியாக ரத்து செய்து தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
அந்த ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் செல்வதற்கு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சென்னையில் இருந்து வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், தாம்பரம்- திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் ஆகியவை மேலப் பாளையம், நாங்குநேரி, பணகுடி, இரணியல் ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதுமட்டுமின்றி நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் 6 பயணிகள் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
திருவனந்தபுரத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் வடக்கு- நாகர்கோவில் சந்திப்பு(56306), மதியம் 1.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் வடக்கு- நாகர்கோவில் சந்திப்பு (56310), நாகர்கோவிலில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் சந்திப்பு- கொல்லம்(56102), காலை 7.55 மணிக்கு புறப்பட்ட வேண்டிய நாகர்கோவில் சந்திப்பு- திருவனந்தபுரம் வடக்கு(56305), மாலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் சந்திப்பு- திருவனந்தபுரம் வடக்கு(56309), கொல்லத்தில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் கொல்லம் சந்திப்பு- நாகர்கோவில் சந்திப்பு(56101) ஆகிய 6 பயணிகள் ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் 6 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
குறிப்பாக கேரளத்தில் இருந்து குமரி மாவட்ட பகுதிகளுக்கும், இங்கிருந்து கேரளம் மாநிலத்துக்கும் வேலைக்கு செல்லும் தனியார் நிறுவன ஊழியர்களும், கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.