

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் 'இருட்டுக்கடை அல்வா' தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு, 2026-ஆம் ஆண்டுக்கான 'Food Connoisseurs India Awards' விழாவில் உயரிய சிறப்பு விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
புதுடெல்லியில் கோலாகலமாக நடைபெற்ற இந்த தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், "Best Sweet Shop of the Year (South)" (தென்னிந்தியாவின் சிறந்த இனிப்பகம்) என்ற மதிப்புமிக்க விருதை இருட்டுக்கடை அல்வா தட்டிச் சென்றுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இருட்டுக்கடை அல்வாவின் தற்போதைய உரிமையாளரான கவிதா சிங் மேடையேறி இந்த உயரிய விருதைப் பெற்றுக் கொண்டார்.
நெல்லையின் பாரம்பரியச் சுவையைத் தங்களின் தனித்துவமான தயாரிப்பு முறை மாறாமல் பல தலைமுறைகளாகப் பாதுகாத்து வரும் இவர்களின் நீண்டகால உழைப்பிற்கு இந்த விருது மிகச் சிறந்த அங்கீகாரமாக அமைந்துள்ளது.
நெல்லை நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள இந்த இருட்டுக்கடை அல்வா கடைக்கு, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும், கோதுமைப் பாலைப் புளிக்க வைத்துச் செய்யப்படும் பாரம்பரியத் தயாரிப்பு முறையும்தான் இந்த அல்வாவின் அசாத்திய சுவைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மாலை நேரத்தில் மட்டுமே திறக்கப்படும் இக்கடையில், ஆரம்ப காலத்தில் ஒரே ஒரு சிம்னி விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே அல்வா விற்பனை செய்யப்பட்டது. நவீன காலத்திலும் அந்தப் பாரம்பரியம் மாறாமல், மிகக் குறைந்த வெளிச்சத்தில் மட்டுமே இப்போதும் அல்வா விற்பனை செய்யப்படுவதால் இதற்கு 'இருட்டுக்கடை அல்வா' என்று பெயர் வந்தது.
தேசியத் தலைநகரான புதுடெல்லியில், தென்னிந்தியாவின் சிறந்த இனிப்பகத்திற்கான விருதை வென்று, நெல்லை மண்ணின் பாரம்பரியச் சுவைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியுள்ள இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதா சிங்கிற்குத் தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.