

நீலாம்பூர் பகுதியில் கார் விபத்துக்கு உள்ளாகி கணவன்-மனைவி இருவரும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் ராக்கிபாளையம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 56). இவர் தனது மனைவி கிருஷ்ணவேணி என்பவருடன் கார் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர்கள் மீண்டும் திருப்பூருக்கு காரில் புறப்பட்டனர்.
அப்போது நீலாம்பூர் வெங்கிட்டாபுரம் பிரிவு பகுதியில் அந்த கார் நேற்று மாலை முன்னால் சென்ற ஒரு தனியார் பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய வாகனம் பின்னர் இடதுபுறம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். பின்னர் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் உதவியுடன் விபத்துக்கு உள்ளான காரில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
அப்போது காருக்குள் இருந்த ரவிக்குமார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானது தெரியவந்தது. தொடர்ந்து இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கிருஷ்ணவேணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை நீலாம்பூர் பகுதியில் கார் விபத்துக்கு உள்ளாகி கணவன்-மனைவி இருவரும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த நீலாம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.