நேபாளத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.
வெள்ள பாதிப்பில் தமிழகத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பலரும் சிக்கி நேபாளம், திபெத் போன்ற இடங்களில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.
அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பலனாக ஒவ்வொரு குழுவினராக மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த 28 பேர் விமானம் மூலமாக இன்று கோவை வந்தனர்.
கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு உறவினர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரோஜா பூக்களை கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களை உறவினர்கள் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
சொந்த ஊர் திரும்பியவர்கள் பதட்டத்துடனேயே இருந்தனர். அவர்கள் நேபாளத்தில் அவர்கள் சந்தித்த பெரும் துயரம் குறித்து கண்கலங்கியபடி பேசினர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து அறிந்து பெரும் துயரம் அடைந்தோம். நாங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை பாதிப்புக்கு முன்னதாக ஒரு நாளைக்கு முன்பு தான் கடந்திருந்தோம்.
அதனால் உயிர் தப்பினோம். பாதிப்பு நடந்த மறுநாள் தான் எங்களுக்கு விவரமே தெரியவந்தது. இதைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.
ஆனால் நாங்கள் இருந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது பத்திரமாக அனைவரும் ஊருக்கு திரும்பி விட்டோம்.
நேபாளத்தில் வெள்ளம் பாதித்த இடத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தோம். நாங்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்ட படி கைலாஷ் யாத்திரை மேற்கொண்டோம்.
தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் போது தான் இந்த தகவல் கிடைத்தது. உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம்.
எங்கள் உறவினர்கள் எங்களை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு எங்கள் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
நேற்று காலை தான் நேபாளத்திலிருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் அனைவரும் 18-ந் தேதி இங்கிருந்து புறப்பட்டு நேபாளம் சென்றோம். நாங்கள் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது இந்த தகவல் எங்களது உறவினர்கள் மூலமாக எங்களுக்கு கிடைத்தது.
உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம். சம்பவம் நடந்த வெள்ள பகுதியை நாங்கள் அதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்புதான் கடந்து வந்து இருந்தோம். அதன் பிறகு சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்து விட்டன.
ஆனாலும் நாங்கள் திட்டமிட்டபடி பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம். இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவியாக இருந்தன. இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்று இருந்தோம். எங்களுக்கு உதவியாக நேபாளத்தைச் சேர்ந்த 7 வழிகாட்டிகள் வந்தனர்.
இந்த வெள்ள சம்பவத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த உதவியாளர் ஒருவரின் உடன் பிறந்த அண்ணன் ஒருவரும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டதாக சுற்றுப்பயணத்தில் இருந்த போது தகவல் கிடைத்தது.
அந்த உதவியாளர் அவரது அண்ணனை இழந்தாலும் கடைசி வரை எங்களுடன் இருந்து வந்தார்.
நாங்கள் இருந்த பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததால் நைலம் வழியாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளோம். எங்களை சீன ராணுவம் 2 வாகனத்தில் வந்து பத்திரமாக கொண்டு வந்து விட்டனர்.
இந்த சம்பவத்தில் எவ்வளவு பேர் இறந்தனர், மாயமானார்கள் என்பது குறித்து அங்குள்ள மக்கள் பதட்டத்துடன் பேசிக் கொண்டனர். மொழி தெரியாததால் எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாங்கள் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் வசித்து வருகிறோம். எனது பெற்றோர் மோகனா (47), சந்திரகுமார் (57) கடந்த 18-ந் தேதி திருப்பூரில் இருந்து 39 பேருடன் நேபாள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றனர்.
2 வாரம் அவர்கள் அங்கு சுற்றுப்ப யணம் செய்து ஆன்மீக தரிசனம் மேற்கொண்டிருந்தனர்.
26-ந் தேதி நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து பதட்டம் அடைந்து பெற்றோரை தொடர்பு கொண்டோம். அவர்களுடன் செல்போனை எடுத்து பேசினர்.
அதன்பிறகே நாங்கள் சற்று நிதானம் ஆனோம். அவர்கள் மானசரோவர் என்ற இடத்தில் பாதுகாப்புடன் இருப்பதாகவும், சம்பவம் நடந்த போது ஏதோ நிலச்ச ரிவு ஏற்பட்டது போன்ற உணர்வை சந்தித்ததாகவும் கூறினர்.
சீனா எல்லையில் இருந்த தால் எனது பெற்றோர் உள்ளிட்ட குழுவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதன் பிறகு சாலைகள் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் திட்டமிட்ட படி திரும்ப முடியவில்லை. சீன ராணுவம் எல்லையை கடக்க உதவியுள்ளனர்.
அதன் பிறகு எனது பெற்றோர் மற்றும் குழுவி னர் டெல்லி வந்து கோவைக்கு விமானத்தில் வந்தனர். இன்று காலை அவர்களை நேரில் பார்த்தபிறகு தான் நிம்மதி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.