

என்னுடன் அதே சவுண்ட் சர்வீசில் வேலை பார்த்து வரும் வாலிபருக்கும், எனது மனைவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை சானல்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவா சரவணன் (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (28) பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சந்தியா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவா சரவணன், தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே அவர் மாயமானது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
எனக்கும், எனது மனைவி சந்தியாவுக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அப்பகுதியில் உள்ள சவுண்ட் சர்வீசில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் அதே சவுண்ட் சர்வீசில் வேலை பார்த்து வரும் வாலிபருக்கும், எனது மனைவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் எனக்கு தெரியவந்ததும், இது தொடர்பாக எனது மனைவியிடம் கேட்டேன்.அப்பொழுது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் எனது மனைவியின் பெற்றோர் வந்து எங்களை சமாதானம் செய்துவிட்டு சென்றனர். இந்தநிலையில் எனது மனைவி அழகு நிலையத்திற்கு வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
அவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அந்த வாலிபர் ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்றுவிட்டார். தற்போது எனது மனைவி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே அவரை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.