

மறியலில் ஈடுபட்ட வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளிடம் போலிசார் பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை மற்றும் கட்சியின் கொடியை, தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் இன்று காலை அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், போலீசாரின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அப்போது அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது, அந்த நிர்வாகி போலீசாரை ஒருமையில் பேசியதாகக் கூறி, போலீசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், சில நிர்வாகிகளையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
பேச்சு வார்த்தை
கட்சி நிர்வாகி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டதாகத் தகவல் பரவியதை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனடியாகத் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு விரைந்தனர்.
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள், அகற்றிய விளம்பரப் பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிர்வாகியை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், நிர்வாகிகளை விடுவிக்க போலீசார் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தனர். இதனால், வேட்பாளர் கார்த்திகா மற்றும் போலீசாருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. போலீசாரின் இந்த போக்கைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட நிர்வாகியை விடுதலை செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறியும், வேட்பாளர் கார்த்திகா தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் திடீரென போலீஸ் நிலையம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் அமர்ந்து போலீசாருக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளிடம் போலிசார் பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகத் தாராபுரம் போலீஸ் நிலையப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.