முதல்வர் விஜய் சட்டசபையில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைப்பது குறித்து அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் (Foreshore Estate) பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமார் 25.55 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் அணுகல் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி மீனவக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் பட்டினப்பாக்கம் தளம் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கேள்விக்கு, பொதுப் பணித்துறை எங்களிடம் இது தொடர்பான உரிய பதிவுகள் இல்லை என்று பதிலளித்துள்ளது. இதனால் இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் மறைந்துள்ள மர்மம் என்ன? என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளது
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கலாம் என்று எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்ற RTI கேள்விக்கு, "அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை" என தவெக அரசு பதிலளித்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
சுமார் 5,000-த்திற்கும் அதிகமான மீனவர்களைக் கொண்ட, 1500 -க்கும் அதிகமான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டினப்பாக்கத்தில், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தலைமைச் செயலகம் கட்ட யார் பரிந்துரைத்தது? முதல்வரின் இல்லத்திற்கு மிக அருகில் இருக்கும் ஒரே காரணத்திற்காக கண்ணை மூடிக் கொண்டு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்து விட்டார்களா? அல்லது அங்கு வாழும் மீனவக் குடும்பங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டார்களா?
அது எப்படி அரசால் கட்டப்படும் புதிய தலைமைச் செயலகம் குறித்த எந்தவித தகவலும் சம்பந்தப்பட்ட அரசிடமே இல்லாமல் போகும்? எதை மூடி மறைக்கிறார்கள்?
இப்படி எல்லாத்தையும் ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்று முடிவு செய்வதால் தான் அடிக்கடி ‘U turn’ போட்டுக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
என்று தெரிவித்துள்ளார்.