முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: துணை ஜனாதிபதி, அரசியல் கட்சியினர் நாளை பசும்பொன்னில் மரியாதை

அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: துணை ஜனாதிபதி, அரசியல் கட்சியினர் நாளை பசும்பொன்னில் மரியாதை
Published on: 
Summary

தமிழக கவர்னர் அர்லேகர், அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாக வேள்வியுடன் தொடங்கியது.

நாளை குருபூஜை

பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசுகிறார்கள்.

நிறைவு நாளான நாளை (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துகிறார். இதற்காக நாளை காலை 8.50 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகை தரும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கிருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் செல்கிறார்.

காலை 9.30 மணி முதல் 10 மணி வரை தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து அதே ஹெலிகாப்டரில் காலை 10.20 மணிக்கு புறப்படும் அவர் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகத்துக்கு 11.10 மணிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு மதுரை வருகை தரும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார். இதேபோல் தமிழக கவர்னர் அர்லேகர், அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி

இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார்.

நாளை (30-ந்தேதி) காலை 8 மணிக்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

நினைவிடத்தில் அஞ்சலி

பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் மு.க. ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எட்பபாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ெசல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.

அரசியல் கட்சி

அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 டி.ஐ.ஜி.க் கள், 40 எஸ்.பி.க்கள் தலைமையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com