அச்சரப்பாக்கம் அருகே நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை கொள்ளை - மர்ம கும்பல் துணிகரம்

கோவிலின் மேற்கு பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை உள்ளது.
கோவிலில் இருந்த மரகத முருகன்  சிலை - சிலை மாயமானதால் காலியாக உள்ள பீடம்
Published on
Summary

அச்சரப்பாக்கம் அருகே நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

மரகத முருகர் சிலை

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த பெருங்கருணை கிராமத்தில் உள்ள கனக மலை குன்றின் மீது தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு முத்து சுவாமிகள் தண்டாயுத பாணி சிலையை நிர்மாணம் செய்து முருக வழிபாட்டில் ஈடுபட்டார்.

சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில் மற்றும் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கும் நடுவில் இருப்பதால் இந்த கோவிலை முருக பக்தர்கள் நடுபழனி முருகன் கோவில் என்று அழைத்து வந்தனர். கோவிலில் சுமார் 3 அடி உயரத்தில் மூலவர் மரகத முருகர் சிலை இருந்தது.

வளர்பிறை, சஷ்டி, கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விசேஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவிலின் மேற்கு பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலையும் உள்ளது.

இந்தக் கோவிலை உருவாக்கிய முத்து சுவாமிகள் முக்தி அடைந்த பின்னர் கோவிலின் நிர்வாகத்தினை பெருங்கருணை கிராம மக்களோடு இணைந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்க வழிவகை செய்ததாக கூறப்படுகிறது. கன ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் திருக்கருணை நடுபழனி தண்டாயுதபாணி கோவிலில் இருந்த கற்சிலையை நீக்கி விட்டு மரகத கல்லால் ஆன தண்டாயுதபாணி மூலவர் சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

தண்டாயுதபாணி சிலை

இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவிலை ஊழியர்கள் பூட்டி சென்றனர். இன்று காலை வழக்கம்போல் கோவிலை பூசாரி திறந்தபோது கருவறையில் இருந்த மூலவர் மரகத கல்லாலான தண்டாயுதபாணி சிலை திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கும், சித்தாமூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கோவிலின் பின்பக்க மலையின் வழியாக வந்து மர்ம கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. மூலவர் சிலை உள்ள இடத்தில் 3 கதவுகளின் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர்.

போலீசார் விசாரணை

கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்படவில்லை. விலை மதிப்பு இல்லாத மரகத முருகன் சிலையை மட்டும் குறிவைத்து கொள்ளையர்கள் இச்சம்பத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலில் காவலாளி உள்ளார். அவர் கோவிலின் கீழ் பகுதியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு கோவிலில் சிலை கொள்ளை போனது தெரியவில்லை. இன்று காலை தான் கோவிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்து சிலையை தூக்கி சென்று இருந்தது தெரிந்தது.

கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவில் மண்டபம் மற்றும் கருவறையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை துண்டித்து உள்ளனர். கோவிலின் பின்பக்கம் உள்ள கண்காணிப்பு கேமராவில் மட்டும் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தன.

சம்பவ இடத்தை டி.எஸ்.பி.தீபக் ரஜினி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை கும்பல் நீண்ட நாட்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com