

புதுக்கோட்டையில் திருமணம் ஆன 7 மாதத்தில் ஆறு மாத கர்ப்பிணி பெண், கள்ளக்காதலை கண்டித்ததால் நாத்தனார் மற்றும் மாமியாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 35). நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர். இவருக்கும் சந்தியா (28) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மேலும் சந்தியா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
பாண்டி துரையின் சகோதரிகள் பாண்டி மீனா (33), பொற்கொடி (29) ஆகியோர் திருமணமாகி, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்களை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். அனைவரும் பாண்டித்துரை வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பாண்டித்துரை வேலை சம்பந்தமாக ஈரோடு புறப்பட்டு சென்றார். மறுநாள் சந்தியா காலை உணவாக பிரட் சாப்பிடும் போது புரைஏறி விக்கல் ஏற்பட்டு, அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து சந்தியா கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சந்தியாவின் நாத்தனார் பாண்டி மீனா, பொற்கொடி, மாமியார் பானுமதி (50) மற்றும் உறவினர்கள் கனிமொழி (27), செல்வி (36), கார்த்தி (24) ஆகிய 6 பேரும் சேர்ந்து அவரை கொடூரமாக கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இயற்கை மரணம் நடந்ததாக கூறி நாடகமாடிய அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசில் பாண்டி மீனா, பொற்கொடி ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்களை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டோம். இந்த நிலையில் சில ஆண் நண்பர்களுடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தோம்.
ஆனால் கடந்த 7 மாதமாக எங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. சந்தியா திருமணமாகி எங்கள் வீட்டுக்கு வந்த பின்னர் எங்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டது. நாங்கள் வாலிபர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை சகோதரர் பாண்டித்துரையிடம் கூறியதோடு எங்களை கண்டித்தார்.
இதனால் சந்தியா மீது எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை தீர்த்து கட்டினால் தான் நாம் சுதந்திரமாக வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்தோம். இந்த கூட்டு சதிக்கு தாயார் பானுமதியும் இசைவு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து உறவினர்கள் கனிமொழி, செல்வி, கார்த்தி ஆகியோரையும் சேர்த்து கொண்டோம். சம்பவத்தன்று அதிகாலை அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சந்தியாவை 6 பேரும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்தோம்.
பின்னர் கொலையை மறைத்து சந்தியாவின் வாயிலும், மூக்கிலும் பால் மற்றும் பிரட்டை திணித்து சாப்பிடும் போது விக்கல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கூறி உறவினர்களிடம் நாடகம் ஆடினோம். போலீசார் சந்தியா கழுத்தில் காயம் இருப்பதை அடையாளம் கண்டு, துப்பு துலக்கி கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் திருமணம் ஆன 7 மாதத்தில் ஆறு மாத கர்ப்பிணி பெண், கள்ளக்காதலை கண்டித்ததால் நாத்தனார் மற்றும் மாமியாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.