'மதுக்கடைகளை விடவும் மலைகள் முக்கியம்': பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை கடும் கண்டனம்!

அரசுத் தரப்பில் முறையான பதில் மனு தாக்கல் செய்யப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது.
Onan Karadu Mountain
Published on: 
Summary

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசுத் தரப்பில் முறையான பதில் மனு தாக்கல் செய்யப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அமைந்துள்ள வரலாற்று மற்றும் தொன்மையான 'ஓணான் கரடு' மலையில் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஓணான் கரடு கல் குவாரிக்கு எதிரான வழக்கு

பேரையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொன்மைச் சிறப்பும் இயற்கை வளமும் கொண்ட ஓணான் கரடு மலைப்பகுதியில் கல் குவாரி இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இயற்கை வளங்கள் மற்றும் சூழலியலைப் பாதிக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும், குவாரி செயல்பாடுகளுக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

பதில் மனு தாக்கல்

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஓணான் கரடு பகுதியில் கல் குவாரி இயங்குவது தொடர்பான தகவல்கள் மற்றும் சூழலியல் பாதிப்புகள் குறித்து விரிவான பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசுத் தரப்பில் முறையான பதில் மனு தாக்கல் செய்யப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது. அரசின் இந்த தொடர் தாமதப் போக்கு நீதிபதிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மதுக்கடைகளை விடவும் மலைகள் முக்கியம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அரசுத் தரப்பின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தது. டாஸ்மாக் மதுக்கடைகளைப் பாதுகாப்பதில் அரசு காட்டும் தீவிரமான அக்கறையையும் வேகத்தையும், நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை. மதுக்கடைகளை பாதுகாப்பதை விடவும் நாட்டின் இயற்கை வளங்களான மலைகளை பாதுகாப்பதுதான் மிகவும் முக்கியமானது. மலைகள் அழியும் நிலைக்குச் சென்றால், அவை மீண்டும் நமக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அரசு எவ்வித அலட்சியமும் காட்டக் கூடாது என எச்சரித்த நீதிபதிகள், ஓணான் கரடு கல் குவாரி வழக்கு தொடர்பாக உடனடியாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அரசுத் தரப்பிற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com