

தருமபுரி பட்டர்பிளை மேம்பாலம் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பட்டர்பிளை மேம்பாலம் பகுதியில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பெங்களூருவில் இருந்து தேனி நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பட்டர்பிளை மேம்பாலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியின் மீது, பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் மோதிய லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். பெங்களூரு ஜெசிப்புராவில் இருந்து தேனிக்கு அரிசி ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி தின்பண்டங்களை ஏற்றிச் சென்ற மினி சரக்கு வாகனமும் பட்டர்பிளை மேம்பாலம் அருகே விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து 2 நாட்களாக ஒரே பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பட்டர்பிளை மேம்பாலம் பகுதியில் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும், தேவையான போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு தொடர் விபத்துகளை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.