

திருடன் தான் வைத்திருந்த கத்தியை திடீரென்று எடுத்து சுழற்றவே இளைஞர்கள் தெறித்து ஓடினர். அப்போது செல்வ விக்னேஷ் மட்டும் திருடன் சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திருடன் செல்வ விக்னேசின் இடுப்பில் கத்தியால் குத்தி விட்டு அவரது கையையும் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
சேலம் குரங்குசாவடி அருகே உள்ள செங்கல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வ விக்னேஷ்(28). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த வாகனத்தை திருடி சென்று விட்டார்.
இது தொடர்பாக செல்வ விக்னேஷ் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி .கேமரா காட்சிகளை சோதனை செய்து பார்த்த போது பச்சை நிற டி சர்ட் அணிந்த ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சி.சி.டி.வி. காட்சிகளுடன் செல்வ விக்னேஷ் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக செங்கல்பேட்டை பகுதியில் அடிக்கடி திருட்டு போவது வாடிக்கையாக இருந்துள்ளது. அப்பகுதியில் இருந்த பொதுக் குழாய் மோட்டார், சைக்கிள் உள்ளிட்டவைகள் திருட்டு போயிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த செல்வ விக்னேஷ் மீண்டும் திருடன் அப்பகுதிக்கு வருவான் என்ற நம்பிக்கையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்து வந்தார்.
அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த திருடன் அதே பச்சை நிற ஆடையில் அங்கு வருவதை கண்ட வாலிபர்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அந்த திருடன், தான் செல்வ விக்னேஷ் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டான். இதனை அடுத்து திருடனை கட்டி போடுவதற்காக வாலிபர்கள் முயற்சி செய்தனர். அப்போது அந்த திருடன் தான் வைத்திருந்த கத்தியை திடீரென்று எடுத்து சுழற்றவே இளைஞர்கள் தெறித்து ஓடினர். அப்போது செல்வ விக்னேஷ் மட்டும் திருடன் சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திருடன் செல்வ விக்னேசின் இடுப்பில் கத்தியால் குத்தி விட்டு அவரது கையையும் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
கை நரம்பு துண்டாகி படுகாயம் அடைந்த செல்வ விக்னேஷ் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே செல்வ விக்னேசை, திருடன் கத்தியால் குத்தியகாட்சிகள் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்த போலீசார் அதில் பதிவான திருடனை தேடி வருகிறார்கள்.