

பெற்ற மகனை வைத்து கொள்ளை நாடகமாடியதாக ஷாயின் பர்வீன் மீது வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷகீல் அஹமத். இவரது மனைவி ஷாயின் பர்வீன். இவர் தனது மாமியார் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 10 வயது மகன் மீது மயக்க மருந்து தெளித்து, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வாணியம்பாடி டி.எஸ்.பி. மகாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவ நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் வீட்டிற்குள் வந்து சென்றதற்கான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.
இதையடுத்து குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஷாயின் பர்வீன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பீரோவில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று கடையில் அடகு வைத்ததும், பணத்தை உறவினர் ஒருவருக்கு அனுப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து, பெற்ற மகனை வைத்து கொள்ளை நாடகமாடியதாக ஷாயின் பர்வீன் மீது வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை போலீஸ் காவலில் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.