

த.வெ.க.வை ஒட்டுமொத்தமாகவோ அல்லது தேர்தல் களத்திலோ நாங்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதால் மட்டுமே ஆதரவு தொடர்பான நிலைப்பாடு குறித்து பேசப்பட்டுள்ளது.
நெல்லையில் இன்று ஏ.ஐ.டி.யூ.சி. 14-வது மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய துணைத்தலைவர் சுப்பராயன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறுவது இயல்பானது. கடந்த காலங்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றிருந்தோம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கொள்கை முரண்பாடுகள் காரணமாக தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினோம்.
தாராபுரம் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது வெறும் தேர்தல் கணக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இடதுசாரிகளின் கொள்கை அடிப்படையிலான அரசியலை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சி. தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சி செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் துறையில் தனியார்மயமாக்கலுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
இதேபோல் ஊழலை ஒழிப்போம் என்று அரசு கூறுவதை வரவேற்கிறோம். நடைமுறையில் அது செயல்படுத்தப்பட வேண்டும். த.வெ.க.வை ஒட்டுமொத்தமாகவோ அல்லது தேர்தல் களத்திலோ நாங்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதால் மட்டுமே ஆதரவு தொடர்பான நிலைப்பாடு குறித்து பேசப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு இடதுசாரிகள் ஆதரவு இல்லை என்பது ஏற்கெனவே கட்சிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் இடைத்தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் பயன்படுத்தப்படுகிறது.
தேர்தலில் தங்களை முன்னிலைப் படுத்துவதற்காக பணம் பயன்படுத்தும் நடைமுறை கடந்த கால அரசுகளிலும் இருந்தது. தற்போது நடைபெறும் தேர்தலிலும் அது தொடர்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்று 20 நாட்களுக்குள் ஒருவர் ஏன் ராஜினாமா செய்தார்? உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா?. இதுதொடர்பாக முறையான விளக்கம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.